போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாக சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை சார்பாக கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட காவல்துறை எஸ்பி மீனா கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தார். பேருந்து நிலையம் அருகே கிட்டப்பா அங்காடியில் துவங்கிய பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கள்ள சாராய போதை சுடுகாட்டுக்கு வழிகாட்டும் பாதை, கள்ள சாராயம் குடிக்காதே கண் பார்வை இழக்காதே, போதை அழிவின் பாதை, போதையால் உடல் உறுப்புகள் செயலிழக்க செய்யும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
இதில் கள்ளசாராயம் மற்றும் போதை பொருட்கள் பற்றிய 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் 10 581 அலைபேசி எண் 96 261 69 492 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கும் படியும் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பேரணியில் பங்கேற்ற எஸ்பி மீனா பொது மக்களுக்கு வழங்கினார். அவ்வழியாக சென்ற மூதாட்டி ஒருவர் சாராயம் விற்பவர்களை பிடித்து சிறையில் அடையுங்கள் என்று கூறிச் சென்றார். இதில் ஏ டி எஸ் பி சிவசங்கர், ஜெயக்குமார், டிஎஸ்பிக்கள் திருப்பதி, லாமேக் காவல் ஆய்வாளர்கள் பாலச்சந்தர், சுப்ரியா செல்வம் அன்னகொடி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.