தன்னார்வ சட்ட பணி சேவைக்கு விண்ணப்பிக்கலாம் - சட்டப்பணிகள் ஆணைக்குழு
தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வ சட்ட பணியாளராக சேவை புரிய விருப்பமுள்ள உள்ளூர் குடியிருப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், கரூர் , குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கடமை சேவை மட்டுமே. இது நிரந்தர பணிக்கானது அல்ல. முற்றிலும் தற்காலிகமானது. மற்றும் அதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை எனவும் , சேவைக்கு தகுந்த கௌரவ ஊதியம் மட்டுமே அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ சட்ட பணியாளராக விண்ணப்பிக்க ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள், சமூகப் பணியில் முதுநிலை கல்வி MSW பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், உடல்நல நிபுணர்கள், மாணவர்கள், அரசியல் சார்பற்ற அரசு சாரா சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சங்க பிரமுகர்கள், மகளிர் குழுக்கள், மைத்திரி சங்கங்கள் மற்றும் வரியோரை உள்ளடக்கிய சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை கரூர் மாவட்ட நீதிமன்றத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வருகிற மே 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம் எனவும், நேர்காணல் தேதி, இடம் மற்றும் இதர விவரங்களை விண்ணப்பதாரர்கள் நீதிமன்றத்தின் இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் எனவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.