உறங்கும் போது உயிரிழந்த பீகார் மாநில வாலிபர்; காவல்துறை வழக்கு பதிவு
சுக்காலியூர் அருகே கருப்பம்பாளையத்தில் உறங்கும் போது உயிரிழந்த பீகார் மாநில வாலிபர் குறித்து போலீஸ் விசாரணை நடக்கிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர பிரசாத் வயது 38 என்பவர், கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் எல்லைக்குட்பட்ட, சுக்காலியூர் அருகே கருப்பம்பாளையம் பகுதியில் உள்ள எஸ் கே எஸ் நகர் பகுதியில் வசித்து வந்தார். மேலும், கருப்பம்பாளையம் பகுதியில் செயல்படும் செல்வி பேப்ரிக் என்ற கொசுவலை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருடன் பீகாரைச் சேர்ந்த தில்குஸ்குமார் வயது 20 என்பவரும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து 9 1/4 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், ஆட்டையாம்பரப்பிலிருந்து, கருப்பம்பாளையம் செல்லும் சாலையில் எஸ் கே எஸ் நகர் அருகே செயல்படும் கிளாசிக் பாலிதீன் கம்பெனி அருகே உறங்கிக் கொண்டிருந்தார் ரவீந்திர பிரசாத். நெடு நேரமாகியும் வேலைக்கு வராததால், அவரை அழைத்து வர தில்கிஸ்குமார் சென்று உள்ளார்.
அப்போது அங்கு உறங்கிக் கொண்டிருந்த ரவீந்திர பிரசாத்தை எழுப்பும் போது, அவர் உயிரிழந்த நிலையில் இருந்தது கண்டு அதிச்சி அடைந்தார். உடனடியாக, இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ரவீந்திர பிரசாத் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.