புத்தாண்டை வித்யாசமாக வரவேற்ற அண்ணன் தங்கை
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சாதனை செய்த அண்ணன் தங்கை
மயிலாடுதுறையில் காவலர்களாக பணிபுரியும் தம்பதியின் மகன் 8-ம் வகுப்பு படிக்கும் அஸ்வினும்(12), மகள் 4-ம் வகுப்பு படிக்கும் அஸ்விதா(8), ஆகிய இருவரும் 2024 புத்தாண்டை வரவேற்று அஸ்வின் சிலம்பத்திலும், அஸ்விதா உடலால் ஜிம்னாஸ்டிக் வளையம் சுற்றியும் உலக சாதனை படைக்கும் முயற்சியாக ஒருமாதம் பயிற்சி எடுத்து இன்று உலக சாதனை படைத்தனர்.
மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு நடத்திய நிகழ்வில் மாணவன் அஸ்வின் சிலம்பத்தில் உள்ள அனைத்து முத்திரைகளையும் 2024 முறை சிலம்பம் சுற்றிகொண்டே சிலம்பத்தின் வரலாறுகளை கூறி சிலம்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து உலக சாதனை படைத்தார். இதேபோல் மாணவி அஸ்விதா ஜிம்னாஸ்டிக் வளையத்தை உடலில் வயிறு, கால், கழுத்து பகுதிகளில் 2024 முறை சுற்றி உலக சாதனை படைத்தார்.
ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு அண்ணன் தங்கையான இரண்டு பேரும் 33 நிமிடம் 24 விநாடிகளில் உலக சாதனையாக பதிவு செய்தது. தொடர்ந்து சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் விருதினை நிறுவனர் ஜாக்கப் ஞானசெல்வன் மற்றும் தமிழ்சங்க நிறுவனர் பவுல்ராஜ், அழகுஜோதி அகடமி தாளாளர் சிவக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர்.