மயூரநாதர் திருக்கோவிலில் திருத்தேரோட்டம்

மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தேர் உற்சவம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த சிறப்புக்குரிய பிரசித்தி பெற்ற மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இவ்வாலயத்தில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 9-ஆம் திருநாளன்று அபயாம்பிகை சமேத மாயூரநாதர், சுப்பிரமணியர், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் கொடிமரத்தின் முன்பு எழுந்தருள செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திருத்தேர் புறப்பட்டு, மேளதாளம் மற்றும் சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க கோயிலின் நான்கு வீதிகளை சுற்றிவந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story