பழவேற்காடில் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு
கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்
ஆழ்கடலில் வசிக்கும் ஆமை வகைகளில் ஒன்றான 'ஆலிவ் ரிட்லி' வகை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் - மார்ச் மாதங்களில், கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளது. கடலை சுத்தம் செய்வதில் இவற்றின் பங்கு அதிகமாக இருப்பதால், அவற்றை பாதுகாப்பதில் வனத்துறையினர் முக்கியத்துவம் தருகின்றனர்.
வங்காள விரிகுடா கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள பழவேற்காடு பகுதியிலும் 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள் முட்டையிடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பழவேற்காடு வனத்துறையினர் ஆலிவ் ரிட்லி ஆமையின் முட்டைகளை பாதுகாப்பாக சேகரித்து, குஞ்சு பொரித்த பின், அவற்றை கடலில் கொண்டு விடுகின்றனர். டிசம்பர் முதல், பழவேற்காடு வனத்துறையினர், முகத்துவாரம் பகுதியில் இருந்து காட்டுப்பள்ளி வரை உள்ள கடற்கரை பகுதிகளில், தினமும் இரவு நேரங்களில் பயணித்து முட்டைகளை சேகரித்தனர். மார்ச் 15ம் தேதி வரை, 11,786 முட்டைகளை சேகரித்தனர்.
அவற்றை பாதுகாப்பதற்காக பழவேற்காடு, அரங்கம் குப்பம் கடற்கரை பகுதியில், பொரிப்பகம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு, 120 குழிகளில், ஆமை கூடுகள் அமைக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட முட்டைகளை, அந்த குழிகளில் மண் மூடி பாதுகாப்பாக வைத்தனர். ஆமை கூடுகளில் இருந்த முட்டைகள், 45 நாட்களில் குஞ்சு பொரித்தன. அவற்றை பழவேற்காடு வனச்சரக அலுவலர் எக்ஸ். ரூஸப் வெஸ்லி தலைமையிலான வனத்துறையினர், மாலை நேரங்களில் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். நேற்று வரை, 9, 418 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் அவ்வப்போது கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள முட்டைகள் பொரிப்பகத்தில் உள்ளன. அடுத்த சில தினங்களில் குஞ்சு பொறித்தபின், கடலுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.