சிறுத்தைபுலி பிடிப்பதில் ஒரு சில பொதுமக்களால் பின்னடைவு - கலெக்டர் மகாபாரதி
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்
மயிலாடுதுறைக்குட்பட்ட செம்மங்குளம் பகுதியில் கடந்த 02.04.2024 அன்று இரவு 11.10 மணியளவில் சிறுத்தைப்புலி நடமாடுவதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் உடனடியாக வனத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை சார்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி, சிறுத்தைப்புலியை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், (04.04.2024) நேற்றைய தினம் சிறுத்தைப்புலியானது ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நடமாடுவதாக பெறப்பட்ட செய்தியின் அடிப்படையில் வனத்துறையினர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
சிறுத்தைப்புலியின் கால்தடம் பதிவானதை கொண்டு ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடுவது உறுதி செய்யப்பட்டது. மேலும், சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கு வன உயிரின காப்பாளர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக அனுபவமுள்ள வன பணியாளர்கள் கள தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம்;, சித்தர்காடு மற்றும் ஊர்குடி ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து 16 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் சிறுத்தைப் பிடிக்கும் 2 கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைப் புலியை பிடிப்பதற்கு 13 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அச்சப்பட தேவையில்லை எனவும் அறுவுறுத்தப்படுகிறது. மேலும், வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் சிறுத்தை நடமாட்டம் பகுதிகளில் சிறுத்தையை பிடிக்க எடுக்கப்படும் முயற்சிகளில் சம்பந்தப்பட்ட ஊர் பொதுமக்கள் கூட்டமாக கூடி, சத்தம் எழுப்பி, சிறுத்தையை பிடிக்க மேற்கொள்ளும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
இதனால் அமைதியான சூழல் மாறி சிறுத்தை நடமாட்டத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், இடையூறு ஏற்பட்டு, சிறுத்தை வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்கின்ற சூழல் ஏற்படுகின்றது. எனவே, பொதுமக்கள் சிறுத்தையை பிடிக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வனத்துறை மற்றும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.