நடைமேடை அறிவிப்பில் தொடர் குழப்பம் - பயணிகள் அவதி, அலுவலர் சஸ்பெண்ட்
பயணிகள் அவதி
மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் ரயில் வண்டிகளை, நடைமேடையில் நிறுத்துவதில், ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டிவருகிறது. சனிக்கிழமை மாலை, 5.55 மணிக்கு 1வது நடைமேடைக்கு, மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் என வழக்கம்போல் அறிவிப்பு பலகையில் பதிவிடப்பட்டிருந்தது. பயணிகள் 1வது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தனர். 5.45 மணிக்கு 2வது நடைமேடையில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் போய் நின்றது, இதைக்கண்டு பதட்டப்பட்டப் பயணிகள், வயதானவர்களுடன் பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு, மாடிப்படியேறி 1வது நடைமேடையிலிருந்து 2வது நடைமேடைக்குச் சென்று ரயிலில் ஏறிக்கொண்டிருந்தனர். திடீரென உடனடியாக ரயில் எடுக்கப்பட்டு 1வது நடைமேடைக்குச் சென்றது, இதைக் கண்ட பயணிகள் மீண்டும் மாடிப்படிகளில் ஏறி 1வது நடைமேடைக்கே சென்றனர். இதுபோல அடிக்கடி நடப்பதாகவும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு சிக்னல் கட்டுப்பாட்டு அறை அலுவலர் சுபம்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.