பொங்கல் பரிசு தொகைக்கான கூப்பன் இன்று முதல் வழங்கல்
செங்கரும்புகளை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர்
பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக கொள்முதல் செய்ய உள்ள முழு நீள கரும்புகளை மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படவுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 432 நியாயவிலை கடை இயங்கி வருகிறது. தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிடும் வகையில் இன்று முதல் 10.1.2024 வரை வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின் உயரம் 6 அடி இருக்க வேண்டும்.எனவே கரும்பு கொள்முதலை பொருத்தவரை விகிதாச்சார முறையில் அனைத்து விவசாயிகளிடமிருந்தும் கரும்புகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.