தருமபுர ஆதீன ஆபாச வீடியோ : பாஜக தலைவர் அகோரம் பதவி நீக்கம்
அகோரம்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது சந்நிதானம் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோராம், தருமபுரம் ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில் உள்ளிட்ட 9 பேர் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கில் குடியரசு, விக்னேஷ், வினோத், ஶ்ரீநிவாஸ், மும்பையில் தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மார்ச் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அகோரம் திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கடந்த 07 ஆம்தேதி திருச்சி மத்திய சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தருமபுரம் ஆதீனகர்த்தர் வழக்கில் சிக்கி 3 மாதங்களுக்குப்பின் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.