தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் சுமந்து பட்டணப்பிரவேசம்

தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் சுமந்து  பட்டணப்பிரவேசம்

தருமபுர ஆதீனம் பட்டணப்பிரவேசம்

தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்.  ஆதீன வீதிகளில் வீதி உலா. பக்தர்கள் பூரண கும்பம் மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்து ஆசி பெற்றனர்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் பட்டிணப்பிரவேச விழா கடந்த 20ஆம் தேதி ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்களாக நடைபெற்று வந்தது. 11ஆம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன மடாதிபதி சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச விழா இரவு கோலாகலமாக நடைபெற்றது.

தருமை ஆதீனம் திருஆபரணங்கள் பூண்டு தங்க பாதரட்சை அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து, சிவிகை பல்லக்கினை நாட்டாமைகள் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து சென்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வரமேள தாளங்கள், சென்டைமேளம் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புளியாட்டாம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வாணவேடிக்கை முழங்க ஆராவாரத்துடன் சிவனடியார்கள், பக்தர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார்.

ஆதீனமடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் ஆதீன மடாதிபதிக்கு பொதுமக்கள் வீடுகளில் பூரணகும்ப வரவேற்பு அளித்து தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கி திருநீறு பிரசாதமாக வழங்கினார். இவ்விழாவில் சைவ ஆதீனங்களான மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார்கோயில் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். பட்டணபிரவேசம் முடிவடைந்து ஆதீன மடாதிபதி ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு திராவிடர் கழகம், உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மனிதனே மனிதனை சுமந்து செல்வது மனித உரிமை மீறல் என்று கூறி போராட்டம் நடத்தியதால் பட்டணபிரவேச நிகழ்ச்சிக்கு அப்போதைய மயிலாடுதுறை கோட்’டாட்சியர் பாலாஜி தடை விதித்தார். இதற்கு இந்து அமைப்பினர், அரசியல்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தடை நீக்கப்பட்டது. ஆனாலும் இரண்டு ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் தருமபுர ஆதீன மடாதிபதி பட்டணபிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் தருமபுர ஆதீன மடத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆண்டு தருமபுர ஆதீனம் ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியதால் பட்டண பிரவேசம் நிகழ்ச்சிநடப்பது ஒத்தி வைக்கப்படலாம் என்று இருந்த நேரத்தில் பலத்த போலீஸ் காவல் வரவழைக்கப்பட்டு ஆடம்பரமாக நடத்தப்பட்டது.

Tags

Next Story