தேர்தலை புறக்கணிக்க முடிவு: உழைக்கும் மக்கள் விடுதலை கழகம்

தேர்தலை புறக்கணிக்க முடிவு: உழைக்கும் மக்கள் விடுதலை கழகம்

செய்தியாளர் சந்திப்பு 

தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக உழைக்கும் மக்கள் விடுதலை கழக நிறுவனத் தலைவர் தேக்கமலை தெரிவித்துள்ளார்.

. கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம், மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவன தலைவர் தேக்கமலை தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார் தேக்கமலை. அப்போது, தேர்தல் காலங்களில் போயர் சமுதாய மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, தேர்தல் அறிக்கையில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு, ஆட்சி அமைத்தபின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் திமுக, அதிமுக கட்சிகள் கவனிக்கும் வகையில், தமிழகத்தில் வாழும் 50 லட்சம் போயர் சமுதாய மக்கள் சார்பில் வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழகத்தில் கட்டுமானம், விவசாயம் போன்ற தொழிலுக்கு தேவையான கல் உடைத்தல், கட்டிட வேலை, கிணறு தோண்டுதல், வாய்க்கால், அணைகள் கட்டுதல், சிற்பி போன்ற கடின வேலை செய்து வரும் 50 லட்சம் போயர் சமுதாய மக்களுக்கு அடிப்படை உரிமைகள் ஏதும் கிடைக்காமல், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் பின்னோக்கி வாழ்ந்து வரும் இந்த சமுதாயத்தினருக்கு போயர் நலவாரியம் & கல் உடைக்கும் தொழிலாளர் நலவாரியத்தை அரசு உடனடியாக அமைத்திட வேண்டும்.

அதேபோல, கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பதவியை போயர் சமுதாய மக்கள் பிரதிநிதிக்கு அரசு வழங்க வேண்டும் எனவும், தமிழகத்தில் அனைத்து ஜாதியினருக்கும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்திட அரசு தாமதிக்காமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் எனவும், அரசு கட்டிட ஒப்பந்தங்களுக்கு போயர் சமுதாய மக்களின் பிரதிநிதிக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றியதோடு,

தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், நடப்பு நாடாளுமன்றத் தேர்தலை வாக்களிக்காமல் புறக்கணிப்பதோடு வரும் 2026 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலின் போது, எங்களது குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம் என தெரிவித்தார்.

Tags

Next Story