மயிலாடுதுறையில் நுகர்வோர் நீதிமன்றம் அமைக்க கோரிக்கை

மயிலாடுதுறையில் நுகர்வோர் நீதிமன்றம் அமைக்க கோரிக்கை

மயிலாடுதுறையில் நுகர்வோர் நீதிமன்றம் அமைக்க நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


மயிலாடுதுறையில் நுகர்வோர் நீதிமன்றம் அமைக்க நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நுகர்வோர் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க, மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு துறை அமைச்சர் அர.சக்கரபாணிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அக்கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ராம.சேயோன் விக்கிரவாண்டியில் அமைச்சரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு, மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டம் கடந்த 2021ல் உதயமானது.

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் தமிழ்நாடு முதலமைச்சரால், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முன்னிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி மதுரையில் இருந்து காணொளி மூலம் தொடங்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடந்த 04.03.2024 ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி தமிழக முதலமைச்சரால் நேரடியாக திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட நுகர்வோர் சார்ந்த வழக்குகள் அனைத்தும் நாகப்பட்டின மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் தொடங்கி மூன்றாண்டுகள் ஆகிய நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நுகர்வோர் வழக்குகள் அனைத்தும் தற்போதுவரை நாகப்பட்டின மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில்தான் நிலுவையில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து நுகர்வோர் வழக்கிற்காக வழக்காடிகள் நாகப்பட்டிணம் செல்வதற்கு ஏறத்தாழ 50 கி.மீ முதல் 70 கி.மீ வரை பயணிக்க வேண்டியுள்ளது. பயண நேரமும் ஏறத்தாழ இரண்டு மணி நேரமாகிறது. நாகப்பட்டின மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளில் ஏறத்தாழ 60 சதவீத வழக்குகள் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்ததாகும். எனவே, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய நுகர்வோர் நீதிமன்றம் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் வேண்டுகிறோம். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story