மயிலாடுதுறையில் சாதனை பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
பத்தாம் பகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2023-2024 கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் பகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கும், அரசு பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி வழங்கிய தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இதில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கான வழிமுறைகளை 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மாணவர்களை முழுமனதோடு படிக்க வைத்ததால் வெற்றியடைந்ததாக தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசுகையில் கடைசியாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் கல்வியில் மாநில அளவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 37 ஆவது இடத்தில் இருந்து 27 வது இடத்திற்கும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 34 வது இடத்தில் இருந்து 29 இடத்திற்கும் முன்னேறியதற்கு இத்தகைய முயற்சி எடுத்த மாணவ,மாணவிகள் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
மாணவர்கள் பெரிய அளவில் கனவு காணவேண்டும், புகழ்பெற்ற ஆசிரியர், மருத்துவர், ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று சிறு வயது முதலே உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று மனதிலும் மூளையிலும் கனவுகளை பதிவு செய்ய வேண்டும். வாழ்வது ஒருமுறைதான் இந்த பருவம் திரும்ப கிடைக்காது. வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் லட்சியத்தோடு கனவு கண்டு வளர வேண்டும் என்றார்.
இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி கலந்து கொண்டு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.