மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்

மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம்



கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தை ஆட்சியர் தங்கவேல் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்ட சுகாதாரப் பேரவை - (2023-24) கூட்டத்தை ஆட்சியர் தங்கவேல் குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆட்சியர் தங்கவேல் பேசும்போது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரப்பேரவை என ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் சுகாதாரத்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவைப்படும் கட்டிடங்கள், உபகரணங்கள், மக்களின் தேவைகள் மற்றும் இதர தேவைகளை வட்டார அளவில் பொது மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் ஒரு குழு அமைத்து, தேவையானவற்றை விவாதித்து, அதனை மாவட்ட அளவில் சமர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை செய்து அதனை மாவட்ட சுகாதாரப் பேரவையாக நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட 315 கருத்துருவில் 18 கருத்துருக்கள் வட்டார அளவிலும்,101 கருத்துருக்கள் மாவட்ட அளவிலும் தீர்வை ஏற்படுத்திக் கொள்ளலாம் எனவும், மீதமுள்ள 195 கருத்துருக்கள் மாநில சுகாதாரப் பேரவையில் வைத்து தீர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது என தீர்மானிக்கப்பட்டு அவை பரிசீலனையில் உள்ளது என்றார். கொரோனா காலத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டது போல் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.
Next Story




