தருமபுர ஆதீனத்தின் முன்னாள் உதவியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
செந்தில்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது சன்னிதானத்தின் ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை போலீஸார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 90 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த இரண்டாவது நபராக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தருமபுரம் ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில்(48) 3மாதங்களாக தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை போலீசார் விமானம் மூலம் வாரணாசிக்கு சென்று, அங்கு மொட்டை அடித்து, தாடி வைத்து மாறு வேடத்தில் பதுங்கி இருந்த செந்திலை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் திருவையாறு செந்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். தலைமறைவாக இருந்த செந்திலை 100 நாட்களுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர். போட்டோ கிராபர் பிரபாகர் திருக்கடையூர் விஜயகுமார் ஆகியோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. செந்திலுக்கு ஜாமீன் வழங்கினால் மீண்டும் தலைமறைவாக வாய்ப்பு உள்ளதாலும் வழக்கு விசாரணை முடிவடையாததால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் ராமசேயோன் என தவிர்ப்பு தெரிவித்து வாதிட்டதால் ஜாமீன் மனுவை நீதிபதி விஜயகுமாரி தள்ளுபடி செய்தார்.