கொடுத்த கடனுக்கு கூடுதல் வட்டியா
கோப்பு படம்
கரூர் மாவட்டம் வெள்ளாளப்பட்டி அருகே உள்ள சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (45). இவர் கரூர் மாவட்டம் புலியூர், மேல தெரு அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டபாணி (39) மற்றும் வெள்ளாளப்பட்டி நாலாவது தெருவை சேர்ந்த சரவணன் ஆகிய இருவரும் கரூர் திருவள்ளூர் மைதானம் அருகே நடத்தி வரும் முருகன் அண்ட் கோ என்ற நிதி நிறுவனத்தில், கடந்த 2020 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி ரூபாய் 2,25,350 கடன் பெற்றிருந்தார் சக்திவேல்.
இந்த கடனுக்கு ஐந்து சதவீத வட்டி தர வேண்டும் என கூறப்பட்டது. வாங்கிய கடனுக்காக ரூபாய் 4,54,000 -ஐ 2023 டிசம்பர் 13ஆம் தேதி வரை சக்திவேல் குறிப்பிட்ட நிதி நிறுவனத்தில் செலுத்தியுள்ளார். கடன் வாங்கும்போது எழுதிக் கொடுத்த புரோ நோட் மற்றும் ஆவணங்களை திருப்பி கேட்டுள்ளார் சக்திவேல். ஆனால், நிதி நிறுவனத்தில் ஆவணங்களை அளிக்காமல், ஏமாற்றி மறுத்துள்ளனர். மேலும் கூடுதல் வட்டி கேட்டு சக்திவேலை தாக்கி உள்ளனர்.
இதுதொடர்பாக சக்திவேல், கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் ஒன்றில் காவல்துறையினர் சட்ட ஆலோசனை கேட்டு விண்ணப்பித்தனர். இதில் நீதிமன்றம் காட்டிய வழிகாட்டுதலின்படி, பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆவணங்களை வழங்க மறுத்த தண்டபாணியை கைது செய்துள்ளனர். மேலும், தப்பி ஓடி தலைமறைவாக உள்ள சரவணனை தேடி வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.