போலியான இறப்பு சான்றிதழ் : நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு.
போலியான இறப்பு சான்றிதழ் வைத்து பிறர் சொத்தை விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு. கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா,கூடலூர் கிராமத்தில் உள்ள தலையாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் எராச்சி ரெட்டியார் மகன் மாராச்சி. இவரது மூத்த சகோதரி குஞ்சம்மாள் இளைய சகோதரி லெட்சுமி.
எராச்சி ரெட்டியார் கடந்த 13-05-1989 அன்று காலமானார்.ஆனால், அவரது இறப்பு பதிவு செய்யப்படவில்லை. கடந்த 2009ல் இறப்பு சான்றிதழ் கேட்டு மாராச்சி குடும்பத்தினர் விண்ணப்பித்தபோது,16- 07- 2009-ல் ஏராச்சி ரெட்டியார் இறந்ததற்கான சான்றிதழை குளித்தலை வருவாய்த்துறையினர் வழங்கினர். இதனைத் தொடர்ந்து வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த போது 19 -08 -2009 ல் இறந்த எராச்சி ரெட்டியாருக்கு குஞ்சம்மாள், மாராட்சி, லட்சுமி ஆகியோர் வாரிசுதாரர் என குளித்தலை வருவாய்த் துறையினர் சான்றிதழ் அளித்தனர்.
இந்நிலையில், எராச்சி ரெட்டியார் 1989ல் இறந்த பிறகு 9 நாளில் 22- 05 -1989ல் குளித்தலை வருவாய்த் துறையினால் இறப்பு சான்றிதழ் வழங்கியதாக கூறி போலியான சான்றிதழை தலையாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சையம்மாள் என்பவர் வைத்துள்ளார். அதில் காலமான எராய்ச்சி ரெட்டியார் என்பதற்கு பதிலாக மாராட்சி ரெட்டியார் காலமானதாகவும், அவரது தந்தை அண்ணாவி ரெட்டியார் என ஒரு சான்றிதழும், மாராச்சி ரெட்டியாரின் தந்தை எராச்சி ரெட்டியார் என இரண்டு சான்றிதழ்களை வைத்துள்ளார்.
ஆக, எராச்சி ரெட்டியார் இறந்ததற்கு பதிலாக மாராச்சி ரெட்டியார் இறந்ததாக இரண்டு போலி இறப்பு சான்றிதழ்களை வைத்துள்ளார். இந்த சான்றிதழ்களை ஆதாரமாக வைத்து, உயிருடன் இருக்கும் எராச்சி ரெட்டியார் மகன் மாராட்சிக்கு சொந்தமான சொத்தை, பிச்சையம்மாள் 04-09-2023 ம் தேதி அன்று அமுதா என்பவருக்கு ஒரு செட்டில்மெண்ட் ஆவணத்தை குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இது குறித்து மாராட்சி குளித்தலை சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் விளக்கம் கேட்டபோது, உரிய பதில் அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். போலியான சான்றிதழ்களை பிச்சையம்மாள் தயாரித்து வழங்கினாரா? அல்லது வருவாய்த்துறை அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவோடு மோசடி கும்பல் செயல்படுகிறதா? என்பதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாராட்சி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.