தபால் வாக்கு செலுத்துவோருக்கு இறுதி வாய்ப்பு - மாவட்ட ஆட்சியர்
ஆட்சியர் தங்கவேல்
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பணிகளில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நாளன்று இவர்களது பணி மிக முக்கியம் என்பதால் அன்றைய தினம் இவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பு இல்லை. இதனால், ஒவ்வொரு தேர்தலின் போதும் இவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்படுவது வழக்கம். கடந்த சில தினங்களாக தபால் வாக்குகள் அளிக்கும் பணி உதவி வாக்கு மையங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் தபால் வாக்களிக்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இன்று காலை 7 மணி முதல் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மையத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சியை சேர்ந்தவர்கள் பதிவு செய்யலாம் எனவும், விராலிமலை தொகுதிக்கு பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ குமரன் பாலிடெக்னிக்கிலும், மணப்பாறை தொகுதிக்கு, மணப்பாறை லட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், வேடசந்தூர் தொகுதிக்கு திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தி்ல் செயல்படும் உதவி மையங்களில் தபால் வாக்கு செலுத்தாதவர்கள் வாக்கு செலுத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிகளை காவல்துறை மற்றும் ஓட்டு சாவடியில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள், பணியாளர்கள், பயன்படுத்தி ஓட்டளிக்க வேண்டும் எனவும், அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.