அதிக வட்டி கேட்டு மிரட்டல் - நிதி நிறுவன உரிமையாளர்கள் கைது

அதிக வட்டி கேட்டு  மிரட்டல் - நிதி நிறுவன உரிமையாளர்கள் கைது

பைல் படம் 

கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியும், கூடுதல்வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த நிதி நிறுவன உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வாங்கபாளையம், பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகநந்தன் வயது 59. வெங்கமேடு நேரு நகர் அருகே உள்ள ஸ்ரீதேவி நகரை சேர்ந்த திருமூர்த்தி மனைவி கிருத்திகா வயது 31, அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திகேயன் வயது 47. இவர்கள் இருவரும் இணைந்து நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில், நாகநாதன் ரூபாய் 15,000 கடன் பெற்று இருந்தார்.

வாங்கிய கடனுக்காக உடனடியாக 1,500- ரூபாயும், நாள் வட்டி கணக்கில் தினந்தோறும் ரூபாய் 150 செலுத்தி, வாங்கிய கடனுக்காக இதுவரை 26,500- ரூபாய் செலுத்தி உள்ளார். இந்நிலையில் மே 14ஆம் தேதி காலை 11 மணியளவில், பெரிய குளத்து பாளையம், ஊராட்சி நடுநிலைப்பள்ளி அருகே, அவரது டூவீலரில் வந்து கொண்டிருந்தார் நாகநாதன். அப்போது, கிருத்திகா மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் நாகநந்தனை இடைமறித்து, கூடுதலாக பணம் கேட்டு உள்ளனர். நாகநந்தன் பணம் தர மறுத்துள்ளார்.

இதனால், இருவரும் சேர்ந்து நாக நந்தனை தகாத வார்த்தை பேசி, மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக நாகநந்தன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கொடுத்த கடனை விட கூடுதலாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கிருத்திகா மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story