அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்வு; தீயணைப்புத்துறையினர் ஆய்வு
அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்வு ஆய்வு செய்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள். கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா மே 12ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் துவங்கியது. நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் இன்று மாலை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் கம்பத்தை அமராவதி ஆற்றின் கரையோரத்தில் 7 முதல் 8 அடி ஆழத்திற்கு குழிப்பறித்து அதில் தண்ணீர் நிரப்பி அதில் கம்பத்தை விடுவது வழக்கம். இம்முறை தமிழக முழுவதும் பரவலாக பெய்த மழையால் அமராவதி ஆற்றில் தற்போது நீரோட்டம் உள்ளது. இதனால் இந்த முறை அமராவதி ஆற்றில் கம்பத்தை விட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை கரூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வடிவேல், மாவட்ட உதவி அலுவலர் கோமதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தீயணைப்பு துறை வீரர்களை ஆற்றில் இறங்கி ஆழம் எவ்வளவு உள்ளது? ஆற்றுக்குள் பாறை, கற்கள் ஏதேனும் உள்ளதா? கம்பம் ஆற்றில் விடும்போது, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆற்றில் இறங்கும் போது அவர்களுக்கு பாதுகாப்பு சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.