புவியியல், சுரங்கத்துறை,மணல் ஒருங்கிணைப்பு குழு கண்காணிப்பு கூட்டம்.

புவியியல், சுரங்கத்துறை,மணல் ஒருங்கிணைப்பு குழு கண்காணிப்பு கூட்டம்.
புவியியல் & சுரங்கத்துறை,மணல் ஒருங்கிணைப்பு குழு சார்பாக மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பாக மாவட்ட கண்காணிப்பு குழு மற்றும் மணல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் முன்னிலை வகித்தார். நடைபெற்ற இந்த கூட்டத்தில் குத்தகை உரிமம் முடிவுற்று கைவிடப்பட்ட குவாரியை சுற்றி கம்பிவேலி அமைக்கவும் மற்றும் மரக்கன்று வைத்து பராமரிக்கவும் பசுமை நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, வட்டாட்சியர்கள் அவர்களது பொறுப்பு வட்டத்திலுள்ள கைவிடப்பட்ட குவாரிகளின் பட்டியலை அனுப்பிவைக்க வேண்டும். குவாரி குத்தகை நடப்பில் இல்லாமலும் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமலும் இயங்கி வரும் குவாரிகளை கண்டறிந்து வருவாய்த்துறை, கனிம வளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .ஆறு மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் கள்ளத்தனமாக மணல் எடுப்பதை தடுக்கும் வண்ணம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், மற்றும் வாகனங்களை கைப்பற்றி நீர்வளத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினர். மேலும், குத்தகை நடப்பிலுள்ள குவாரிகளில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்யவும், குவாரியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை வட்ட அளவிலான கண்காணிப்பு குழுவினர்கள் கண்காணிக்க வேண்டும். குவாரி பணியாளர்கள் அனைவரும் தமிழ்நாடு அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியம் மற்றும் பிரதான் மந்திரி சுரஷசா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளார்களா? என்பதை தொழிலாளர் உதவி ஆணையர், சமூக பாதுகாப்புத் திட்டம் அலுவலர்கள் உறுதிபடுத்த வேண்டும். அரசு அனுமதி பெறாமல் கனிமக் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை கைப்பற்றி அரசாணை எண். 170, தொழில்துறை, நாள்:05.08.2020 மற்றும் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959, விதி 36-A-இன்படி காவல்துறை, வருவாய்துறை மற்றும் கனிம வளத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அலுவலருக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பிரமானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டயுதாபாணி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பூர்ணவேல், அலுவலக (குற்றவியல்) மேலாளர் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story