சிறுமி கர்ப்பம் - ராமநாதபுரம் நபர் மீது போக்சோ
காவல் நிலையம்
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் பகுதியிலிருந்து மயிலாடுதுறை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு 1098 மூலம் வந்த தொலைபேசி அழைப்பில், குத்தாலம் அரசு மருத்துவமனையில்15 வயது சிறுமி ஒருவர் மூன்று மாத கர்ப்பம் தரித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் கூறப்பட்டது. இது குறித்து மயிலாடுதுறை குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஆரோக்கியராஜ் குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கே சிகிச்சை பெற்று வந்த சிறுமியை சந்தித்தார்.
சிறுமியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், நிலைய ஆய்வாளர் நாகவள்ளி, விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஓராண்டாக அந்த நபருடன் ஷேர் சாட் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும் மூன்று மாதங்களுக்கு முன்பு காரில் வந்த அந்த நபர், சிறுமியை குத்தாலத்திலிருந்து அழைத்துக்கொண்டு வேளாங்கண்ணிக்கு சென்று தனி அறை எடுத்து ஒன்றாக இருந்துள்ளனர். அதன் பிறகு இருவரும் அவரவர்கள் ஊருக்குச் சென்று விட்டனர். அந்த நபரின் பெயர் குட்டி என்கிற கௌதம் என்றும் அவரது ஊர் ராமநாதபுரம் என்று மட்டும் தெரியும் மற்ற விவரம் தெரியாது என்று அச்சிறுமி தெரிவித்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி, ராமநாதபுரம் நபர் மீது போக்சோ சட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.