கரூருக்கு வெப்ப அலை மஞ்சள் எச்சரிக்கை - பொதுமக்கள் அவதி.

கரூரில் நிலவும் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது மக்களை மேலும் அச்சப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று கரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, வெயிலில் தாக்கம் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிக அளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட இரண்டு டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. இதன்படி 19ஆம் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதே போல சுற்றுவட்டார மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கரூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, அரியலூர், மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் காலை 11:00 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story