மயிலாடுதுறை தொகுதியில் 89 பதற்றமான வாக்குச்சாவடிகள்
தேர்தல் ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் ஆக மொத்தம் 1743 வாக்குசாவடிகள் உள்ளன. இதில் 89 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள், காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இப்பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளராக பணியாற்றுவதற்கு மத்திய அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 50 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கு 62 நுண் பார்வையாளர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நுண்பார்வையாளர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்தல் அலுவலகத்திற்கு அறிக்கையாக தகவல்களை வழங்குவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) விஜயராகவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.