நெல்மணியில்"அ" முதல் எழுத்தை எழுதிய பள்ளி மாணவர்கள்...!

நெல்மணியில் அ எழுதிய பள்ளி மாணவர்கள்

நெல்மணியில் அ எழுதிய பள்ளி மாணவர்கள்
கரூரில் நெல்மணியில்"அ" முதல் எழுத்தை எழுதி பள்ளி வாழ்க்கையை மாணவ, மாணவிகள் தொடங்கினர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 2024 25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
அதன்படி அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மற்றும் பயன்களை பெற்றோர்களுக்கு தெரிவித்து சேர்க்கையினை தொடங்கிட வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று தாந்தோணி மலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற மாணவ மாணவியர் முதன் முதலாக நெல்மணியில் "அ" என்ற எழுத்தை எழுதி பள்ளி வாழ்க்கையை தொடங்கினர். இவர்களுக்கு உதவியாக பள்ளி ஆசிரியர்கள் "அ" என்ற எழுத்தை எழுத உதவினர். பின்னர் பள்ளியில் சேர்ந்தமைக்காக மாணாக்கர்களின் வாயில் தேன் புகட்டி வாழ்த்து தெரிவித்தனர் ஆசிரியர்கள்.


