கஞ்சா கடத்திய கேரள இளைஞர் கைது

கஞ்சா கடத்திய கேரள இளைஞர் கைது

கஞ்சா கடத்தல்

மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த கேரள மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் போதைபொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்த வேண்டும் என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் உள்ள காவல்நிலைய பகுதிகளில் கஞ்சா உள்பட பல்வேறு போதைபொருள் நடமாட்டத்தை தடுக்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆவடி காவல் ஆணையரக மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையர் அசோகன் மேற்பார்வையில், செங்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மலர்செல்வி, எஸ்ஐ சந்தோஷ்குமார் தலைமையில் போலீசார் நேற்றிரவு மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு தோளில் ஸ்கூல் பேக் மாட்டிக்கொண்டு சந்தேக நிலையில் சுற்றி திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகமடைந்த போலீசார், அவர் தோளில் மாட்டியிருந்த ஸ்கூல் பேக்கை சோதனை செய்தனர். அதில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த நசீர் (29) எனத் தெரியவந்தது. மேலும், இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, கும்மிடிப்பூண்டி உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபர் நசீரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story