இரண்டாவது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு.....
நீதிமன்ற புறக்கணிப்பு
கரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு. தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் தங்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை இ-பைலிங் செய்ய வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், பெரும்பாலான நீதிமன்றங்களில் இ-பைலிங் செய்வதற்கான கட்டமைப்புகள் இன்னும் நிறுவப்படாமல் உள்ளது. இயல்பாக வழக்கறிஞர் ஒரு மனுவை தாக்கீடு செய்ய வேண்டுமானால் ஒரு நாளில் செய்துவிடலாம். அதைவிட விரைவாக செய்யலாம் என்ற கருத்தியல் காரணமாக இ- பைலிங் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனால்,அதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்படாமலும், முறையாக பயிற்சி முடித்த அலுவலர்களை நீதிமன்றத்தில் நியமிக்காமலும் உள்ளதால், இ-பைலிங் செய்வதற்கு இரண்டு நாட்கள் முதல் 5 நாட்கள் வரை ஆவதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இ-பைலிங் முறையை நடைமுறைப்படுத்த தேவையான கட்டமைப்பு வசதிகளை நிறுவும் வரை இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கூறி, இன்று கரூர் மாவட்டத்தில், கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க மாநில துணை தலைவர் மாரப்பன் தலைமையிலும், குளித்தலை, அரவக்குறிச்சி, மாயனூர் நீதிமன்றங்களில் பார் அசோசியேஷன் தலைவர் சாகுல் அமீது தலைமையிலும் இன்று இரண்டாவது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வழக்கறிஞர்கள் பணியை புறக்கணிப்பு செய்ததால், வழக்காடிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.