சிறுத்தை நடமாட்டம் : பல்வேறு கிராமங்களில் வனத்துறையினர் முகாம்

சிறுத்தை நடமாட்டம் :  பல்வேறு கிராமங்களில் வனத்துறையினர் முகாம்

வனத்துறையினர்  முகாம் 

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறையினர் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் முகாமிட்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் உறுதி செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் இருந்து சிறுத்தை நகர்ந்து சென்று ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள கருவேலங்காட்டு பகுதிக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில் வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு கூண்டுகள் அமைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் நான்கு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சித்தர்காடு மற்றும் ரயில் நிலையம் அருகே இரண்டு ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றதாக கூறப்பட்ட நிலையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் மோப்பநாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து நேற்று மாலை அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நேரடியாக சென்று பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது கூடுதலாக திருப்பூர் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டு ஆரோக்கியநாதபுரம் , திருநாள்கொண்டச்சேரி , ரயில் நிலையம் அருகே உள்ள பகுதி உள்ளிட்டவற்றில் 7 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வழுவூர் , கோவங்குடி, மறையூர் ஆகிய பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். மேலும் முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் பல்வேறு கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டதால் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். முறையான அறிவிப்புகளை அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story