கரூரில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடக்கம்
"நடப்போம் நலம் பெறுவோம்" ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் எட்டு கிலோமீட்டர் நடைப்பயிற்சியினை சென்னை பெசன்ட் நகரில் உள்ள முத்துலட்சுமி பூங்காவில் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து கரூர் சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடை பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் எம்பி ஜோதிமணி, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவிக்கும் போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், 2023-24 சட்டமன்ற பேரவை அறிவிப்பின்போது, தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8- கிலோமீட்டர் தூரம் கொண்ட நடைபாதை கண்டறியப்பட்டு, பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நல்வாழ்வு பெறுவதற்கான பெருந்திரள் நடை பயிற்சிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.