மகா காளியம்மன் திருநடன உற்சவம் : அரவன் அசுரனை வதம் செய்த காளியம்மன்
அசுரவதம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் அருள்பாலித்துவரும் ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயம் உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்ட நோய் நீங்க பெற்றதுமான திரு துருத்தி என்னும் குத்தாலம் சேத்திரத்திற்கு தென்மேற்கு திசையில் திருக்கோயில் கொண்டு காளிதாசர், விக்ரமாதித்திய மஹாராவின் மதிமந்திரி பட்டிக்கு 2000 வயது கொடுத்தவளும், விகடகவி தெனாலிராமனுக்கு அருள் புரிந்து காட்சி அளித்த வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் ஶ்ரீமகாகாளியம்மன் திருநடன உற்சவம் கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இன்று கோவிலின் அருகே 30 அடி நீளத்தில் பிரம்மாண்ட அரவன் அசுரன் மண் பொம்மை அமைக்கப்பட்டு காளி திரு நடனம் புரிந்தவாறு கையில் சூலம் ஏந்தி வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காளியம்மன் திருநடன உற்சவம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக நாயக்கர் தோட்டத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் சென்றடைந்தது. பக்தர்கள் வீடுகள் தோறும் மாவிலக்கு படையல் இட்டு வழிபாடு செய்தனர். இந்த திருநடன உற்சவம் ஆனது தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவீதி உலா நடைபெற்று கோவிலை வந்தடையும். அதனைத் தொடர்ந்து பத்தாம் நாள் உற்சவமான மூன்றாம் தேதி அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காளி வதம் செய்யும் நிகழ்வையும், திருநடன காட்சியையும் கண்டு ரசித்து வழிபட்டு சென்றனர்.