மதுவுக்கு அடிமையான கணவனை திட்டிய மனைவி- கணவன் செய்த விபரீத செயல்
தற்கொலை
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், மென்காட்டுதெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிராஜ். வயது 44. இவர் சமீபகாலமாக மது போதைக்கு அடிமையாகி இருந்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சச்சரவு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், மார்ச் 25ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், மது அருந்தி வந்த கணவன் மணிராஜை, அவரது மனைவி மகாலட்சுமி திட்டி உள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த மணிராஜ், பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த மணிராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மகாலட்சுமி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த மணிராஜன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.