நெல்லும்,கரும்பும் விளைந்த பூமியில் மிளகு சாகுபடி - அசத்தும் விவசாயி

நெல்லும்,கரும்பும் விளைந்த பூமியில் மிளகு சாகுபடி  - அசத்தும் விவசாயி

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீரமணி 

மயிலாடுதுறை அருகே மலைப்பயிரான மிளகை, சமவெளி பகுதியில் வண்டல் மண் பூமியில் சாகுபடி செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வீரமணி விவசாயிகளுக்கு வழிகாட்டியாய் திகழ்ந்து வருகிறார்.

காவிரி டெல்டா பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீரமணி சமவெளியில் மிளகுசாகுபடி செய்து அசத்தியுள்ளார். இவர் தனது வீட்டு தோட்டத்தில் வண்டல்மண் நிறைந்த 3 ஏக்கரில் சமவெளியில் மிளகு சாகுபடி செய்யமுடியும் என்பதை மெய்பித்துள்ளார். 100 மிளகு கன்றுகளை வாங்கிவந்து மிளகு கொடிகள் படர்வதற்கு தனியாக செலவு செய்யாமல் தோட்டத்தில் தேக்கு, தென்னை, மகாகனி போன்ற பல மரங்கள் சாகுபடி செய்யப்பட்ட இடத்தில் இந்த மிளகு செடிகளை நடவு செய்து கொடிகளை மரங்களில் படரவிட்டுள்ளார்.

சாகுபடி செய்து மூன்றரை வருடத்தில் முதல் அறுவடையை தந்தது. ஒரு மரத்தில் படரவிடப்படும் மிளகு செடியிலிருந்து 10 கிலோ பச்சை மிளகை அறுவடை செய்தார். அதை பதப்படுத்தினால் மூன்றரை கிலோ வரை காய்ந்த மிளகு கிடைக்கும் ஒரு கிலோ மிளகு 800 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறார். மிளகு செடிகளை நடவு செய்து இரண்டுமுறை இயற்கை உரத்தை அளித்தால் போதும் செலவு செய்ய தேவையில்லை என்று கூறும் விவசாயி வீரமணி தனது தோட்டத்தில் 400 மரங்களில் மிளகு சாகுபடி செய்து கடந்த அறுவடையில் 50 ஆயிரம் ரூபாயும் இந்த ஆண்டு 1 லட்சம் ரூபாயும் மிளகில் மட்டும் லாபம் ஈட்டியுள்ளதாக கூறுகிறார்.

டெல்டா மாவட்டத்தில் பன்னியூரா ரக மிளகே சாகுபடி செய்ய சிறந்ததாக உள்ளது என்றும் 12 வருடங்களாக மிளகு சாகுபடி செய்து செலவே இல்லாமல் கொள்ளை லாபம் பார்த்து வருவதாகவும், மரங்களும் பல்வேறு காய் கணிகளை உற்பத்தி செய்து இரட்டிப்பு லாபமடைவதாக கூறும் வீரமணி, ஈசா காவிரி கூக்குரல் சார்பில் தனது வீட்டருகே நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பல்வேறு மாவட்ட விவசாயிகளுக்கு சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது சாத்தியமே என்று கூறி மிளகு சாகுபடி செய்யும் வழிமுறைகள், சமவெளியில் மிளகு உயிர் பிழைக்கும் திறனை அதிகரிப்பது எப்படி, மரங்களில் மிளகை படரவிடுவது, உள்ளிட்ட சாகுபடி முறைகளை கூறி தனது தோட்டத்திற்கு விவசாயிகளை அழைத்து சென்று மிளகுசாகுபடி குறித்து கள விளக்கமளித்தார். அனைவரது வீட்டு கொல்லையிலும் மிளகுசாகுபடி செய்ய முடியும் என்றும் மரம் சார்ந்த விவசாயமாக மிளகு சாகுபடி செய்து இரட்டிப்பு லாபமடைய அரசு விவசாயிகளுக்கு ஊக்கம் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் விவசாயி வீரமணி.

Tags

Next Story