காமாட்சி அம்மன் ஆலயத்தில் பால் குட திருவிழா

காமாட்சி அம்மன் ஆலயத்தில் பால் குட திருவிழா

பால் குடம் சுமந்து வந்த பக்தர்கள்

மயிலாடுதுறை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் மற்றும் ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் பால்குடம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்

மயிலாடுதுறை கூறைநாடு ஆராயத்தெரு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் ஸ்ரீ பெத்தாரண்ண சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலின் பால்குட திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. புனுகீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்தும் மேள தாள வாத்தியங்கள் முழங்க பால்குடம், தீர்க்க குடங்கள் எடுத்தும் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக திருக்கோயிலை வந்தடைந்தனர்.

வழிநெடுகிலும் பொதுமக்கள் தீபாரதனை காண்பித்து வழிபாடு நடத்தினர். பால்குடங்கள் கோவிலை வந்தடைந்து ஆலயத்தில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தலையில் சுமந்து வந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கோயிலில் அர்ச்சனை செய்து மாவிளக்கு இட்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கஞ்சி அமுது வார்த்தல், மாலை சந்தன காப்பு அலங்காரம் மற்றும் இரவு ஸ்ரீ காமாட்சி அம்மன் அன்னபக்சி வாகனத்தில் வீதியுலா புறப்பாடும் நடைபெற்றது. இதேபோல் மயிலாடுதுறை ராஜாத்தெருவில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு ஏக தின உற்சவ விழாவை முன்னிட்டு பால்குட விழா விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவிரி கரையில் இருந்து பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story