மயூரநாதர் ஆலயத்தில் சுப்பிரமணியசுவாமி - தெய்வானை திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த ஆலயமான பிரசித்தி பெற்ற ஶ்ரீ மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இவ்வாலயத்தில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 7ஆம் திருநாளான ஶ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
ஶ்ரீ அபயாம்பிகை சமேத ஶ்ரீமாயூரநாதர் வெள்ளி ரதத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர். தொடர்ந்து ஶ்ரீசுப்ரமணியசுவாமி ஶ்ரீதெய்வானையுடன் வெளிமண்டபத்தில் எழுந்தருளி நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமி அம்பாளுக்கு பாலால் கால் அலம்பி, பட்டாடையால் துடைத்து, பச்சைபுடி சுற்றி பெண்கள் நலுங்கிட்டனர்.
தொடர்ந்து ஹோமம் வளர்க்கப்பட்டு கங்கனம் கட்டி கன்னிகாதானம் செய்யப்பட்டது. பின்னர் பட்டாடை சாத்தப்பட்டு திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்றது. பின்னர் பூரணாகுதி செய்யப்பட்டு சுவாமி அம்பாளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு பஞ்சமுக தீபாரதனை, 16 வகையான சோடச தீபாரதனை மகாதீபாரதனை நடைபெற்றது.
இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள், வேலப்ப தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். பின்னர் மேளதாள வாத்தியங்கள் சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க பஞ்சமூர்திகளின் திருவீதியுலா காட்சி நடைபெற்றது.