மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு
நடைபெறவுள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு இன்று 18.04.2024 ம் தேதி மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள வாக்கு மையங்களுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலிருந்து ஒரு மண்டல அலுவலர் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை Sector Police Officer பாதுகாப்புடன் எடுத்துச் சென்று 422 இடங்களில் உள்ள 860 வாக்கு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது.
மேற்கண்ட வாக்கு மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 19.04.2024-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து மேற்கண்ட வாக்கு மையங்களிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 04.06.2024-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை பாதுகாப்பாக வைக்கவுள்ள AVC பொறியியல் கல்லூரி மற்றும் AVC கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடத்தில் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் மையத்தினை தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் . ஜியாவுல் ஹக், இன்று 18.04.2024 ம் தேதி மாலை ஆய்வு மேற்கொண்டார். காவல் கண்காணிப்பாளர் மீனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (Head Quarter) ஜெயக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CCW) முனைவர்.சிவசங்கர், துணைக்காவல் கண்காணிப்பாளர் மயிலாடுதுறை உட்கோட்டம் திருப்பதி, மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பாலச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.