திமுக சேர்மன் வாகனத்தில் பணம், கட்சி சின்னம் பொறித்த கவர்கள் பறிமுதல்

திமுக சேர்மன் வாகனத்தில் பணம்,  கட்சி சின்னம் பொறித்த கவர்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கவர்கள் 

பொன்னேரி அருகே பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் திமுக ஒன்றிய சேர்மன் காரிலிருந்து கட்சி சின்னம் பொறித்த பரிசு கவர்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நிலையான கண்காணிப்பு குழுவினர் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவியின் வாகனத்தை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில் 50000ரூபாய் பணமும், கட்சி தலைவர்கள், சின்னம் பொறித்த பரிசு கவர்களும் இருந்தன. இதனையடுத்து பணத்தையும், பரிசு கவர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது 50000ரூபாய்க்கு அதிகமாக வைத்திருந்தால் தானே பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

கட்சி சின்னம் பொறித்த பரிசு கவர் உள்ளதால் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என கூறிய போது வழக்கமாக திருமணம், பிறந்தநாள், காதணி விழா என சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது மொய் கொடுப்பதற்காக வைத்திருக்கும் கவர் என கூறியுள்ளனர். எனினும் பணமும், கட்சி சின்னம் பொறித்த பரிசு கவரும் காரில் இருந்ததால் அதனை பறிமுதல் செய்வதாக கூறி பொன்னேரி உதவி தேர்தல் அலுவலரிடம் அதிகாரிகள் பணத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் காரில் இருந்து 50000ரூபாயையும், பரிசு கவரும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story