2 ஆண்டுகளாக திறக்கப்படாத புதிய கழிப்பறை கட்டடம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. குத்தாலத்தில் இருந்து விழுப்புரம், மார்க்கம் திருச்சி மர்க்கமாக செல்லும் ரயில்வே பயனாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பறை வசதி சரிவர இல்லாததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தின் வாசலில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் போர்ட்டபிள் (portable) டைப் கழிப்பறை கட்டடம் கட்டித் தரப்பட்டது.
நிர்வாக கோளாறு காரணமாக இரண்டு ஆண்டுகளை கடந்தும் இந்த கழிப்பறை கட்டிடம் திறக்கப்படாமலேயே உள்ளது. ரயில் நிலையத்தில் இரண்டு கழிப்பறை கட்டடங்கள் இருந்தும் இரண்டுமே பொதுமக்களுக்கு பயன்படாமல் இருப்பது ரயில்வே பயனாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாமக மாவட்ட தலைவர் விமல் கூறுகையில், ரயில் நிலையத்தின் உள்ளே உள்ள கழிப்பறை கட்டடத்தை ரயில்வே நிர்வாகம் உடனடியாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குத்தாலத்தில் உள்ள அரசினர் மகளிர் பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாமல் மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, ரயில் நிலையத்தின் முன்பு என்எல்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை கட்டடம் போர்ட்டபிள் டைப் என்பதால் அதனை ரயில் நிலையம் பகுதியில் இருந்து அகற்றி அரசினர் மகளிர் பள்ளியில் பொருத்தி மாணவிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்