தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் சுப்பையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கரூர் மாவட்ட தலைவர் செல்வரத்தினம், செயலாளர் கதிரவன், பொருளாளர் பிரபாகரன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான நிர்வாகிகள், இருபால் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, காலதாமதமின்றி நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும், தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் நியாயமான புதிய ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும் எனவும், மாவட்ட தேர்வாணைக்குழு, மாநில தேர்வாணைக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் சொந்த ஊரிலிருந்து வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் கணிசமான அளவில் பெண் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.6,250 என்ற குறைந்த அளவிலான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களை சொந்த ஊருக்கு இடம் மாறுதல் செய்ய வேண்டும் எனவும், பணியில் சேர்ந்து பல வருடங்கள் ஆகியும் பதவி உயர்வு வழங்காமலும், பணி ஓய்வு பெறும் வயது வரை பதவி உயர்வு கிட்டாத நிலையில் இருந்து வருவதையும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து ஆர்ப்பாட்ட தலைவர் சுப்பையன் கூறும்போது, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம் கோரிக்கைகளை ஏற்க விட்டால் மார்ச் 25 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

Tags

Next Story