பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு - மக்கள் வரவேற்பு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு - மக்கள் வரவேற்பு

பேராசிரியர் ஜெயராமன் 

மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூர் மாவட்டத்தை முழுமையாகவும், கடலூர், புதுக்கோட்டையில் விடுபட்ட வட்டங்களையும், திருச்சி மாவட்டத்தில் தகுதியுடைய வட்டங்களையும் வேளாண் மண்டல வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என பேராசிரியர் ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 5 வட்டங்களும் கடந்த அதிமுக அரசால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு, கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தமிழகத்தின் 38-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதற்கான மசோதா கடந்த ஆண்டு அக்டோபர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு பகுதியில் மூடப்பட்டுள்ள கரும்பு ஆலை, நூற்பாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார். மேலும், காலக்கெடு முடிவடைந்தும் மூடப்படாத ஓஎன்ஜிசி கிணறுகளை உடனடியாக முற்றிலுமாக மூட வேண்டும், அரியலூர் மாவட்டத்தை முழுமையாகவும், கடலூர், புதுக்கோட்டையில் விடுபட்ட வட்டங்களையும், திருச்சி மாவட்டத்தில் தகுதியுடைய வட்டங்களையும் வேளாண் மண்டல வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story