தேர்தல் பணி வாடகைக்கு சொந்த வாகனங்களை பயன்படுத்த எதிர்ப்பு

தேர்தல் பணி வாடகைக்கு சொந்த வாகனங்களை பயன்படுத்த எதிர்ப்பு

மனு அளிக்க வந்தவர்கள் 

மயிலாடுதுறையில் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களுக்கான வாகனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வாடகைக்கு பெற்றுள்ளதைக் கண்டித்தும், சொந்த வாகனங்களை வாடகை வாகனமாக பயன்படுத்துவதைக் கண்டித்தும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வாடகை வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 9 பறக்கும் படைகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் செல்வதற்கு அரசு வாகனங்கள் இல்லாமல் உள்ளூர் தனியார் ஊர்திகள் பணியமர்த்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது, இந்த வாகனங்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் மொத்தமாக கான்ட்ராக்ட் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

சில பறக்கும் படைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வாகனங்களில் சில அதிகாரிகளின் சொந்த வாகனங்கள் உபயோகப்படுத்துகின்றன. இதற்கான டீசல் செலவினம் மற்றும் வாடகை படி ஆகியவற்றை முறைகேடாக பெறுவதற்கு வாய்ப்புள்ளது. இதனை தடுத்து நிறுத்த கோரியும், அரசுத்துறை சார்ந்த பயன்பாட்டுக்கு வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

நூற்றுக்கு மேற்பட்ட வாடகை ஊர்தி ஓட்டுநர்கள் பேரணியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். உடனடியாக சொந்த பயன்பாட்டு வாகனங்களை தேர்தல் பணியில் ஈடுபடுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தாவிட்டால், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை ஓட்டுநர்கள் அனைவரும் புறக்கணித்து, வாக்குப்பதிவு தொடங்கி முடிவு பெறும் நேரம் வரை ஒரு பொதுவான இடத்தில் கூடி அமைதியான முறையில் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

Tags

Next Story