பழவேற்காடு : 1,200 ஆமை முட்டைகள் சேகரிப்பு
ஆமைகள் மற்றும் முட்டை
நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் முட்டையிடும் காலம் ஆகும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சுபொரித்து விடும். தற்போது சென்னை கடற்கரை மற்றும் பழவேற் காடு கடற்கரை பகுதிகளில் ஏராளமான ஆமைகள் முட்டையிட்டு வருகின்றன. இந்த நிலையில் பழவேற்காடு பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் இதுவரை சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது. இதற்கிடையே பழவேற்காடு பகுதியில் முட்டையிட கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் இறந்து வருகின்றன. படகுகள் மற்றும் வலைகளில் சிக்கி காயம் அடைந்து அவை இறப்பதாக ஆமைகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.