சுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்த ஊராட்சி மன்ற தலைவர்
பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வடக்கு நல்லூர் ஊராட்சி, துரைநல்லூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 22 ஏக்கர் பரப்பளவில் மேய்க்கால் புறம்போக்கு மற்றும் சுடுகாடு நிலம் உள்ளது. இந்த நிலையில் இதற்கு அருகாமையில் தனியார் லாரி குடோன் அமைப்பதற்காக ரெண்டு ஏக்கர் முப்பது சென்ட் பரப்பளவில் நிறுவனம் அமைக்க கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த நிறுவனத்திற்கு ஏதுவாக அரசு மேய்க்கால் புறம்போக்கு மற்றும் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை ஆக்கிரமித்து சாலை அமைத்து சுற்றுச்சுவர் எழுப்பிய நிலையில் இதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புகார் மீது நடவடிக்கை கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டம் நடத்த முயன்ற போது காவல்துறையினர் மற்றும் திமுக செயலாளர் செல்வசேகரன் ஆகியோர் வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனாலும் கிராம மக்கள் அரசுக்கு சொந்தமான இடத்தை தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்டு தரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.