பெற்றோரின் சொத்துக்களை பெற்று அவர்களை பராமரிக்காமல் விட்ட பிள்ளைகள்
பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தம்பதி
மயிலாடுதுறை மாவட்டம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியை சேர்ந்தவர்கள் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செல்லதுரை (84) -கலியம்மாள்(76) தம்பதியினர். இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதையடுத்து, செல்லதுரை தனது சொந்த உழைப்பில் வாங்கிய சொத்துக்களை செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் பிள்ளைகளுக்கு எழுதி வைத்துள்ளார்.
அதன்பின்னர் பிள்ளைகள் யாரும் அவர்களை பராமரிக்காமல் விட்டுள்ளனர். இதுகுறித்து, ஏற்கனவே கோட்டாட்சியர் அலுவலகத்தில் செல்லதுரை மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் விதிகள் 2007-ன்கீழ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீது இரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டதன்பேரில் மகன் முத்துக்குமாரசுவாமி, மகள்கள் கலைச்செல்வி, தேவி, பிரசன்னதேவி ஆகிய 4 பேரும் செல்லதுரை, கலியம்மாள் இருவரையும் அவர்களது வாழ்நாள் முழுவதும் நல்லமுறையில் கவனித்துக் கொள்ள கோட்டாட்சியர் ஆணையிட்டார்.
ஆனால், அதன்பின்னரும் பிள்ளைகள் யாரும் கண்டுகொள்ளாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த வயோதிக தம்பதியினர், பிள்ளைகளுக்கு எழுதித்தந்த சொத்துக்களை மீண்டும் தங்களுக்கு மீட்டுத் தரவேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் மேல் முறையீட்டு மனுவை அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.