பஸ் ஸ்டாப் அருகே புகையிலைப் பொருட்களை விற்க முயன்றவர்கள் கைது
. கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நவம்பர் 26 ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்மங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, மண்மங்கலம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் கீழ் சதாம்பூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் வயது 41, நாமக்கல் மாவட்டம்,மோகனூர்,
காளிபாளையம், குடி தெருவை சேர்ந்த சிவகுமார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் விற்பனைக்காக கொண்டு வந்த, 6 கிலோ 600 கிராம் எடை கொண்ட ஹான்ஸ், 113 கிராம் எடை கொண்ட கூல் லிப், 840 கிராம் எடை கொண்ட விமல் பாக்கு ஆகியவற்றை வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த பொருட்களை மதிப்பீடு செய்த போது ரூபாய் 12,000- மதிப்பிலான இந்த பொருட்களை அவர்கள் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.
எனவே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திகேயன் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.