காவிரி தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக,மத்திய அரசு களை கண்டித்து போராட்டம்
காவிரி நீரை பெற்று தராத மத்திய அரசையும் வழங்க மறுத்தும் கர்நாடக அரசையும் கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தராத மத்திய அரசையும், வழங்க மறுக்கும் கர்நாடக அரசையும் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் வீரராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன் உள்ளிட்ட கட்சி மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி நீரின்றி குறுவை சாகுபடி மகசூலை இழந்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், குறுவைத் தொகுப்பு நிதி திட்டத்தில் 50% மானியத்தை நேரிடையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், பருத்தி, எள், வாழை பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கியுள்ள விவசாய கடன் வட்டியை தள்ளுபடி செய்திட வேண்டும், காவிரி தீர்ப்பாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஜூன் மாதத்துக்கான நீரை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.