அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம்: கரூரில் ஏற்பாடுகள் தீவிரம்



ராமர் படம் வழங்கும் நிகழ்வு
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம். வீடுகள் தோறும் ராமர் படம் வழங்க ஏற்பாடு. நாடு முழுவதும் எதிர்பார்ப்புடன் அயோத்தியில் நடந்து வரும் ராமர் கோவில் கட்டும் பணிகள் குறித்து உலகெங்கிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பணிகள் முடித்து, வரும் ஜனவரி மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது இந்து கோவில் என்பதால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துக்களுடைய பங்களிப்பும், இந்த நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விஎன்சி மகாலில் ஆர் எஸ் எஸ் இயக்கமும், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையும் இணைந்து வீடுகள் தோறும் ஸ்ரீ ராமர் படம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக இந்த அமைப்புகளுடன் பிஜேபி கட்சி நிர்வாகிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்து, ஒவ்வொரு மண்டல பொறுப்பாளர்களிடமும் ஸ்ரீ ராமன் திருவுருவப்படமும் அட்சதையும் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதனைப் பெற்றுக் கொண்ட நிர்வாகிகள், அவர்கள் பொறுப்பு வகிக்கும் பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று வழங்க ஆலோசனை வழங்கியுள்ளனர். இதற்காக, மண்டல பொறுப்பாளர்களுக்கு விசேஷ குவளைகளில் புனித நீர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிஜேபி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதே போல, இந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், பிஜேபி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



