காணாமல் போன பெண் சடலமாக மீட்பு உறவினர்கள் போராட்டம்
தேன்மொழி (55)
மயிலாடுதுறை அருகே காணாமல் போன பெண் வாய்க்காலில் கட்டுப்பான பணி நடைபெறும் இடத்தில் தண்ணீர் தேங்கிய பகுதியில் இருந்து சடலமாக மீட்பு , இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே திருச்சிற்றம்பலம் ஊராட்சி தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி தேன்மொழி (55)விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் நாள் முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் தேன்மொழி மாயமானது குறித்து மணல்மேடு காவல் நிலையத்தில் கணவர் மகாலிங்கம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்மணியை தேடி வந்துள்ளனர். தொடர்ந்து இன்று மாலை தெற்கு ராஜன் வாய்க்காலில் பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களை பிரிக்கும் டிவைடர் கட்டுமான பணி நடந்து வரும் இடத்தில் மழைநீர் தேங்கிய பகுதியில் இருந்து தேன்மொழியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீபதி கட்டுமான நிறுவனத்தின் வாகனம் மோதி தேன்மொழி உயிரிழந்ததாகவும், அதனை மறைக்க தண்ணீர் தேங்கிய பகுதியில் சடலத்தை தள்ளி விட்டுள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இயந்திரங்களையும் தாக்கினர். இதில் ஜேசிபி டிரைவர் ஈரோடு பூபாலன் என்பவர் காயமடைந்தார். தகவலறிந்து வந்த மணல்மேடு போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு எட்டப்படாத நிலையில் தேன்மொழியின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் பெருமாள் என்பவரிடம் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அங்கு வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. இதனை அடுத்து இறந்த தேன்மொழியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் கட்டுமான பணி நடைபெற்ற இடத்தில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story