பொன்னேரி அருகே குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
சேதமடைந்த குழாய்
பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, 103 கிராமங்களுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேற்கண்ட ஆழ்துளை கிணறுகள் உரிய பராமரிப்பு இன்றியும், உடைப்புகள் ஏற்பட்டும் குடிநீர் வீணாகி வருவது குறித்து,
நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, நேற்று தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், வன்னிப்பாக்கம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு உடைப்பு ஏற்பட்டிருந்த குழாய்களை சரிசெய்தும், ஆழ்துளை கிணறுகளை சுற்றிலும் இருந்த புதர்களை அகற்றியும் சீரமைத்தனர்.
ஆற்றில் மழைநீர் தேங்கியிருந்ததால், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தற்போது உடைப்புகள் சரிசெய்யப்பட்டு குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.