ஊராளி கவுண்டர் சமூகத்திற்கு எம்.பி சீட் வழங்க கோரிக்கை
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, ஜவகர் பஜாரில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊராளி கவுண்டர் இளைஞர் நல சங்கத்தின் 3-ம் ஆண்டு செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பூவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் சாய் செல்வம், மாநில பொருளாளர் அருள் முருகன், மாநில துணைத்தலைவர் வெற்றி முருகன், மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட கட்சியின் மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில், 40 சதவீதத்துக்கு மேல் ஊராளி கவுண்டர் வாக்காளர்களைக் கொண்ட கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு, இதே சமுதாயத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு தரும் கட்சிக்கு கட்சி பாகுபாடு இன்றி ஆதரவு அளிப்பது எனவும் தீர்மானம். சங்கத்தின் நீண்ட நாட்கள் கோரிக்கையான ஒற்றை ஜாதி சான்றிதழ் பெற வேண்டி அரசுக்கு அழுத்தம் கொடுப்பது எனவும், மாநில அரசுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அழுத்தம் கொடுப்பது எனவும், ஊராளி கவுண்டர்கள் பெரும்பான்மையாக வசிக்கும், பஞ்சப்பட்டி பகுதியில் உள்ள ஏரியையும், பொன்னனி ஆறு, குண்டாறு, நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுப்பது எனவும், விசாரணை இன்றி பி சி ஆர் வழக்கு பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும் எனவும், கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தொடர்ந்து தனி தொகுதியாக இருப்பதை மாற்றி பொது தொகுதிக்கு மாற்ற வலியுறுத்தியும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது.